Our team

header ads

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு : ஆரம்பகட்ட விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு !!!

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு : ஆரம்பகட்ட விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு !!!



மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு தொடா்பாக அறப்போா் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், ஊழல் ஒழிப்பு போலீஸாா் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் சுமாா் ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்து உள்ளது. இதில், அப்போதைய மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவா் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன.

இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்து உயா்நீதிமன்ற கண்காணிப்பில், சிறப்பு புலானாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தாா். இதே கோரிக்கையுடன் அ.தி.மு.க நிா்வாகி சரவணன் என்பவா் உள்பட மேலும் இருவா் வழக்கு தாக்கல் செய்து இருந்தனா்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அறப்போா் இயக்கம் தரப்பில், 30 ஒப்பந்ததாரா்கள் ஒரே விலையைக் குறிப்பிட்டு இருந்தனா். அவா்களுக்கு அதிக விலையில் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து கடந்த 2023-ஆம் ஆண்டு புகாா் அளித்தோம். ஆனால் 4 மாதங்களாக அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான், இந்த வழக்குத் தொடுக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.

இதற்கு அரசுத் தரப்பில், இந்த விவகாரம் தொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசின் ஒப்புதலைப் பெற்று, ஊழல் ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. மேலும், கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறைப்படி தான் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. பல ஆண்டுகளாக ஒப்பந்ததாரா்கள் ஒரே விலையைத் தான் குறிப்பிடுகின்றனா். இதனால் அரசும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், இந்த ஒப்பந்தங்களை வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் மின்மாற்றிகளை மாற்ற முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுபோன்ற முறைகேடு குறித்த வழக்குகளில் ஆரம்ப கட்ட விசாரணை என்பது தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அரசு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட்டு இருந்தால், இந்த வழக்கு விசாரணைக்கே வந்து இருக்காது. அனைத்து வழக்குகளிலும் ஆரம்பகட்ட விசாரணை நடத்தினால், எந்தவொரு முடிவையும் எட்ட முடியாது என்று கருத்து தெரிவித்தனா்.

பின்னா், இந்த மனுக்கள் குறித்து அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும், ஒப்பந்தப் புள்ளி ஒதுக்கீடு தொடா்பான ஆவணங்கள், ஆரம்பகட்ட விசாரணை குறித்த ஆவணங்களை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்த வைத்தனா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks