Our team

header ads

ரூ.7,100 கோடி,தமிழகம், புதுச்சேரிக்கு வளர்ச்சித் திட்டப் பணிகள் :பிரதமர் இன்று அர்ப்பணிக்கிறார் !!!

ரூ.7,100 கோடி மதிப்பிலானபிரதமர் இன்று அர்ப்பணிக்கிறார் !!! வளர்ச்சித் திட்டப் பணிகள் : தமிழகம், புதுச்சேரியில் 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு உள்கட்டமைப்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

இதையொட்டி, இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8.15 மணி அளவில் வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அரசின் சார்பில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசு, காவல் துறை உயரதிகாரிகள் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற பிரதமர் அங்கு இரவு தங்கினார்.

இன்று காலையில் அவர் சென்னை விமான நிலையம் சென்று அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்.  காலை 11.45 மணி அளவில், புதுச்சேரியில் ரூ.2,700 கோடிக்கு மேல் மதிப்பு உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தும் சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டியும் நிகழ்ச்சியில் பேசுகிறார்.

புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் தஞ்சாவூருக்கு செல்லும் பிரதமர் அங்கு இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு செல்கிறார். அங்கு பிற்பகல் 3 மணி அளவில், ரூ.4,400 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

மாலை 4 மணி அளவில் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதமர் தரிசனம் செய்கிறார். பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதை அடுத்து மாலை 6.10 மணி அளவில் தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் டெல்லி திரும்புகிறார்

புதுச்சேரியில் மின்சார பேருந்து சேவை திட்டம், நவீன நகரம் திட்டத்தின் (ஸ்மார்ட் சிட்டி மிஷன்) கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புத்தாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் நீடித்த தன்மைக்கான நகர முதலீடுகள் திட்ட முன்முயற்சியின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவு அடைந்த பிரிவினருக்கான குடியிருப்புகள் மற்றும் புதுச்சேரி அரசின் மிக முக்கியமான கழிவுநீர் மற்றும் நீர் வழங்கல் துறைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் கூட்டுப் பொறியியல் வளாகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் வளாகம் மற்றும் கங்கா விடுதி, ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள பிராந்திய புற்றுநோய் மைய நவீனமயமாக்கல், பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் புதிய இணைப்பு கட்டடங்கள், விரிவுரை அரங்குகள் மற்றும் விடுதிகளை பிரதமர் திறந்து வைக்கிறார்.

மேலும், 750 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள காரசூர் - சேதராப்பட்டு தொழிற்பேட்டையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  இதில் மருந்தக பூங்கா, ஜவுளி பூங்கா, தொழில்நுட்ப பூங்கா, ஐஐடி மெட்ராஸின் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஜிப்மரின் மேம்பட்ட சுகாதார வசதிகள் ஆகியவை இடம்பெறும்.

புதுச்சேரி பகுதியில் வசிப்பவா்களுக்கு குடிநீர் அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் குடிநீர் வழங்கல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமரின் கிாமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 41 கிராமப்புற சாலைகள் கட்டுமானம், புதுச்சேரியில் பாரம்பரிய நகர மேம்பாடு, மிஷ்டி (கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி) திட்டத்தின் கீழ் சதுப்புநில மறுசீரமைப்பு, நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை திட்டங்கள், புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் மின் துறை திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

இதேபோல, மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் நகர்ப்புற சாலைகள், வடிகால் வலை அமைப்புகள், அரசு கட்டடங்கள், மாணவர் விடுதிகள் மற்றும் விளையாட்டு வசதிகள் போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கிய பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

புதுச்சேரியில் பயணத்தை முடித்துக் கொண்டு தஞ்சாவூர் வழியாக மதுரைக்கு வரும் பிரதமர், மதுரையில் இணைப்பு மற்றும் இயக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ரூ.4,400 கோடிக்கு மேல் மதிப்பு உள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.

பயண நேரத்தை வெகுவாகக் குறைக்க வகை செய்யும் தேசிய நெடுஞ்சாலை 332-இன் கீழ் வரும் மரக்காணம் - புதுச்சேரி பிரிவின் நான்கு வழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 87- இன் கீழ் வரும் பரமக்குடி- ராமநாதபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

பிரதமர் கதி சக்தியின் கொள்கைகளுடன் இணைக்கப்பட்ட இந்த வழித்தடம், மீன்பிடித் தொகுப்புகள், ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம், ஒரு மெகா உணவுப் பூங்கா மற்றும் ஒரு ஜவுளிப் பூங்கா உள்ளிட்ட முக்கிய பொருளாதார மையங்களை ஒருங்கிணைக்கும்.

பிரதமரின் வருகையையொட்டி சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது.

இந்நிலையில், பிரதமரின் புதுச்சேரி மற்றும் தமிழக பயணம் அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்று உள்ளது.

மாநிலத்தில் ரயில் சாா்ந்த இணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதன் அங்கமாக அமிரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மொரப்பூர், பொம்மிடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு ஆகிய 8 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

சென்னை கடற்கரை- சென்னை எழும்பூர் நான்காவது பாதை, தமிழ்நாட்டில் வானொலி ஒலிபரப்பு சேவைகளை மேலும் வலுப்படுத்த, கும்பகோணம், ஏற்காடு மற்றும் வேலூரில் மூன்று புதிய ஆகாஷ்வாணி பண்பலை ‘ரிலே டிரான்ஸ்மிட்டா்களை’ பிரதமர் திறந்து வைக்க உள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்

© Seithi Today – All Rights Reserved
Website Developed & Maintained by
IPD Media Networks