பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி - மயக்கம் : மாநகராட்சி பள்ளி ஊழியர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் !!!
கோவை, கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு 48 மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு காலை, மற்றும் மதியம் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. தினமும் 354 மாணவ - மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மத்திய உணவு சாப்பிட்ட 31 மாணவர்கள் 13 மாணவிகள் என 44 பேருக்கு திடீரென வாந்தி - மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட 44 மாணவ - மாணவிகளையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
நேற்று மாலை அனைத்து மாணவ - மாணவிகளும் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கு இடையில் சம்பவம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகராட்சி பள்ளி முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்பொழுது மாணவ - மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இருந்தது கிடப்பதை பார்த்தனர். பல்லி விழுந்ததை கவனிக்காமல் உணவை சத்துணவு ஊழியர்கள் பரிமாறியதால் அதை சாப்பிட்ட மாணவ - மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.
மதிய உணவு தயாரிப்பில் அஜாக்கிரதையாக இருந்த ஊழியர்களிடம் மாநகராட்சி பள்ளி முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் கவுசல்யா, சமையலர் மனோகரி, சமையல் உதவியாளர் ஜெயா கமலம் ஆகிய மூன்று பேரையும் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். நேற்று மாநகராட்சியில் வேறு பள்ளிக் கூடங்களை சேர்ந்த ஊழியர்கள் கவுண்டம்பாளையம் பள்ளியில் பணி அமர்த்தப்பட்டு சமையல் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் சத்துணவு அமைப்பாளர் கவுசல்யா, சமையலர் மனோகரி, சமையல் உதவியாளர் ஜெயா கமலம் ஆகியோரே பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.


0 கருத்துகள்